நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு

Webdunia

வெள்ளி, 16 நவம்பர் 2007 (14:26 IST)
மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு ரூ. 50 கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் மூலமாக நேரடியாகவும், மாநில அரசு அமைப்புகள் மூலமாகவும் விவசாயிகளிடம் இருந்து நெல், கோதுமை ஆகியவற்றை கொள்முதல் செய்து வருகிறது.

இதன் கொள்முதல் விலையை ஒவ்வொரு வருடத்திலும் அறிவிக்கும். இதன் படி சென்ற அக்டோபர் 9 ந் தேதி கோதுமை, நெல் கொள்முதல் விலையை அறிவித்தது. கோதுமைக்கு குவின்டால் ரூ. 1,000, சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூ. 675, மற்ற நெ‌ல் ரகத்திற்கு ரூ. 645 எனவும் இத்துடன் கூடுதலாக குவின்டாலுக்கு ரூ. 50 வழங்கப்படும் என அறிவித்தது.

கொள்முதல் ஆதார விலையையும் போனசையும் சேர்த்து கணக்கிட்டால் சன்னரகத்திற்கு குவின்டாலுக்கு ரூ 725 ம், மற்ற ரகத்திற்கு ரூ. 695 கிடைக்கும்.

விவசாயிகள் இந்த விலை கட்டுப்படியாகாது கோதுமைக்கு வழங்குவது போலவே குவின்டாலுக்கு ரூ. 1000 வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நெல்லுக்கு கூடுதலாக போனஸ் ரூ. 50 வழங்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

இதன்படி விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு போனசுடன் சேர்த்து சன்னரகத்திற்கு குவின்டாலுக்கு ரூ. 775 ம், மற்ற ரகத்திற்கு குவின்டாலுக்கு ரூ. 745 கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்