தொடர்மழையால் ஈரோடு பகுதியில் நெற்பயிர்கள் நாசம்

Webdunia

சனி, 10 நவம்பர் 2007 (11:25 IST)
ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமானது.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இதில் தற்போது அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு போதிய விலை இல்லாத காரணத்தாலும், அதிக செலவு மற்றும் நடவு, அறுவடை பணிகளுக்கு தொழிலாளர் தட்டுப்பாடு மற்றும் கூலி உயர்வு போன்ற காரணங்களால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பளவு கடந்தாண்டை விட 20 சதவீதம் குறைந்தது.

காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் ஆண்டுதோறும் 12 ஆயிரம் ஏக்கர் வரை நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சராசரியாக 8 ஆயிரம் ஏக்கர்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் பயிரிட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.ஒரு வாரமாக பெய்துவரும் மழையால் நெற்பயிர், கதிருடன் சேற்றில் மூழ்கி நாசமானது.

நெற்பயிர் வயல்களில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளதால், அறுவடைக்கு தொழிலாளர்கள் வயலில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெற்கதிர்கள் சேற்றில் சிக்கி, நெல் மணிகள் மீண்டும் முளைக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு தலா 66 கிலோ எடையுள்ள 35 முதல் 40 மூடை வரை நெல் விளைச்சல் கிடைக்கும். தற்போது போதியளவு உற்பத்தி இருந்தும் மழையால் ஏக்கருக்கு 30 மூடைக்கும் குறைவாகவே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் வைக்கோல் முழுவதும் மழையில் நனைந்து சேற்றில் சிக்கியதால், அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்தில், முன்னதாக சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் கடந்த மாதமே அறுவடை செய்யப்பட்டதால், பாதிப்பு ஏற்படவில்லை. காலிங்கராயன் கால்வாய் பகுதியில் தாமதமாக ஆடி மாதம் நடவு பணி துவங்கியதால், தற்போது அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்