இந்த ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை!

Webdunia

செவ்வாய், 30 அக்டோபர் 2007 (17:38 IST)
மே‌ட்டூ‌ர் அ‌ணி இ‌ந்த ஆ‌ண்டி‌ல் 7வது முறையாக நி‌ர‌ம்‌பியு‌ள்ளது.

தமிழகத்திலு‌ம், கா‌வி‌ரி ‌நீர்ப்பிடி‌ப்பு பகு‌திக‌ளிலு‌ம் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனா‌ல் கர்நாடகா‌‌வி‌ல் உ‌ள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் த‌ண்‌‌ணீ‌ர் ‌‌நிர‌ம்‌பியதா‌ல் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனா‌ல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலை அணை‌க்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது. நேரம் செல்ல செல்ல தண்ணீ‌ர் வரத்து அதிகரித்தது.

இரவு 12 மணி அளவில் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டு 7வது முறையாக அணை நிரம்பி சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 7ஆ‌ம் தேதி முதல் முறையாகவும், ஆகஸ்‌ட் மாதம் 8ஆ‌ம் தேதி 2வது முறையாகவும், அதே மாதம் 27ஆ‌ம் தேதி 3-வது முறையாகவும், செப்டம்பர் மாதம் 4ஆ‌ம் தேதி 4-வது முறையாகவும், அதே மாதம் 17ஆ‌ம் தேதி 5-வது முறையாகவும், 28ஆ‌ம் தேதி 6-வது முறையாகவும் அணை நிரம்பியுள்ளது.

இன்று காலை 8 மணியின் போது நீர்மட்டம் 120.52 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 59 ஆயிரத்து 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் பாலம் வழியாக இரவு 2 மணி முதல் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

16 கண் பாலம் வழியாக 11 ஆ‌யிரத்து 800 கன அடி தண்ணீரும் நீர்மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

மேட்டூர் அணை இந்த ஆண்டில் 7 முறை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்