நெல் கொள்முதல் விலை அதிகரிக்கும்? மத்திய அரசு ஆலோசனை!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (18:37 IST)
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த 9-ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரை குழு நெல் கொள்முதல் விலையை அறிவித்தது. இதன்படி சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ரூ.675 ், மற்ற ரக நெல்லுக்கு குவின்டால் ரூ.654 என அறிவித்தது. இத்துடன் போனசாக குவின்டாலுக்கு ரூ.50 வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

இதன்படி இந்திய உணவுக் கழகம், தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிபக் கழகம் ஆகியன கொள்முதல் செய்யும் சன்ன ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.-725், மற்ற ரக நெல்லுக்கு ரூ.695-ம் வழங்கப்படும்.

ஆனால் கோதுமைக்கான கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் என அறிவித்தது.

இதே போல் நெல்லுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

இந்த விலை கட்டுப்படியாகாது என்றும், கோதுமைக்கு சமமாக நெல்லுக்கும் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1000 ஆக உயர்த்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா கட்சி தலைவருமான எல். ே. அத்வானி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சென்ற வாரம் கடிதம் எழுதினார்.

இதே போல் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூபாய் ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா, தெலுங்கான ராஷ்டிரிய சமீதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும், தொண்டர்களும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நெல் கொள்முதல் விலை பிரச்சனை விவாதத்திற்கு வந்தது.

இதில் நெல் கொள்முதல் விலையை அதிகரிப்பது பற்றி நிதி அமைச்சர் ப. சிதம்பரம், விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகிய இருவரும், திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவுடன் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். இவர்கள் நெல்லுக்கு கொள்முதல் விலையாக எவ்வளவு வழங்கலாம் என்பதை முடிவு செய்து, மத்திய அமைச்சரவை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இவர்கள் மூவரும் வருகின்ற 31-ஆம் தேதி சந்தித்து பேசி நெல் கொள்முதலுக்கான விலையை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள் என தெரிகிறது.

இந்திய உணவு கழகம் உட்பட அரசு அமைப்புக்கள் கோதுமை கொள்முதல் செய்யும் அளவு குறைந்தது. இதனால் பொது விநியோக திட்டம், மற்றும் வேலைக்கு உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கோதுமையின் அளவு குறைந்தது.

அத்துடன் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டில் இருந்து குவின்டால் ரூ.1,400 என்ற விலையில் இறக்குமதி செய்தது. இதற்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனடிப்படையில் கோதுமைக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு 1 டன் ரூ.1,000 என உயர்த்தி அறிவித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சன்னரக நெல் கொள்முதல் விலைக்கும், கோதுமைக்கான கொள்முதல் விலைக்கும் வேறுபாடு குவின்டாலுக்கு ரூ.50 மட்டுமே இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்