நெல் கொள்முதல் பாதிப்பு

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (13:07 IST)
கரிப் பரவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பதில் தாமதம் ஆவதால், நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு பருவத்திலும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன், கூடுதலாக ஊக்கத் தொகை அறிவிக்கிறது. இதுவரை கரிப் பருவத்திற்கான ஊக்கத்தொகை அறிவிக்கவில்லை. இதனால் நெல் கொள்முதல் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகம், மாநில அரசின் நுகர்பொருள் வாணிப கழகங்கள் ஆகியவை விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றன. இவை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும், மற்றும் மத்திய அரசி்ன் உணவுக்கான வேலை திட்டத்திற்காகவும் விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் மத்திய அரசு குறிப்பிட்ட அளவு உணவு தானியங்களை அவசர தேவைக்காக இருப்பில் வைக்கின்றது.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகமும், மாநில அரசுகளின் வாணிப கழகங்களும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளிடம் இருந்து சென்ற திங்கட் கிழமை வரை 17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளன. சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 22 லட்சத்து 79 ஆயிரம் டன் கொள்முதல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு குறைந்த அளவே நெல் கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள், அரவை ஆலைகள் அதிகளவு நெல்லை கொள்முதல் செய்துள்ளனர்.

பெரும்பான்மையான விவசாயிகள் அரசு ஊக்கத் தொகை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில், நெல்லை விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்துள்ளனர். இருப்பில் வைக்க முடியாத விவசாயிகள் தனியாரிடம் விற்பனை செய்கின்றனர். ஏனெனில் வியாபாரிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையை விட சிறிது அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். மத்திய அரசு பஞ்சாப், ஹரியனா மாநிலங்களில் முதல் ரக நெல் குவிண்டால் ரூ. 675 ஆகவும், மற்ற வகை நெல் குவிண்டால் ரூ. 645 ஆகவும் நிர்ணயித்துள்ளது.

மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை கூடும் போது நெல்லுக்கு ஊக்கத்த தொகையாக குவின்டாலுக்கு ரூ.40 அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்