இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் விவசாய விளை பொருட்களின் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரயில்வே நிலத்தில் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க, ஆர்வமுள்ள தனியார் துறையினரிடம் இருந்து விருப்ப வேண்டு கோளை ரயில்வே கேட்க உள்ளது.
இந்த திட்டத்தின் படி பெருநகரங்கள் (சென்னை, டெல்லி, கல்கத்தா, மும்பை) தவிர மற்ற நகரங்களில் ரயில்வே வசம் பயன்படாமல் உபரியாக இருக்கும் இடத்தில் தனியார் துறையினருக்கு பழங்கள், காய்கறி போன்ற விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க அனுமதி தரப்படும்.
இது பற்றி ரயில்வேயின் உயர் அதிகாரி கூறுகையில், ரயில்வே வசம் பயன்படுத்தப் படாமல் காலியாக இருக்கும் இடங்களில் பழங்கள், காய்கறி போன்ற விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க தனியார் துறையினருக்கு நிலம் வழங்கப்படும். அத்துடன் மின்சாரம், தண்ணீர் போன்ற தேவையான வசதிகள் செய்து தரப்படும்.
ரயில்வேயின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்ட போது, பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து விவசாய பொருட்களை விற்பனை கடைகளை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு குறிப்பிட்டு கூறும் படியாக எந்த முயற்சியும் செய்யவில்லை.
பொதுத் துறை தனியாருடன் இணைந்து விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யும் சில்லரை விற்பனை நிலையங்களை அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் அடங்கியுள்ளன.
இதனால் ரயில்வே துறை இந்த சங்கிலித் தொடர் கடைகளை அமைக்க ஆர்வம் உள்ள பெரிய அளவிலான தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளிடம் இருந்து விருப்பத்தை கேட்டுள்ளது. இதற்கான பொறுப்பு ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சங்கிலித் தொடர் போன்று பரந்த அளவில் விற்பனை நிலையங்களை அமைத்திருக்கும் நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆர்வம் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இதன் நோக்கம் வேகமாக வளர்ந்து வரும் சில்லரை விற்பனை துறையின் பயன்கள் விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அத்துடன் குறைந்த மற்றம் நடுத்தர தூரங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து அதிகரிக்க வேண்டும் என்பதாகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.