நாமக்கல் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய்க்கு 5 மாடுகள் பலியாகியுள்ளது. இதற்கு பயந்து விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனை செய்வதை தடுக்க நோய் தடுப்பு முகாம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் புதன்சந்தை, புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான கோவிந்தம்பாளையம், கண்ணூர்பட்டி, தாத்தையங்கார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கால்நடை வளர்த்து வருகின்றனர்.
கால்நடைகளை நம்பி ஏராளமானோர் வாழ்க்கை நடத்தி வருவதால் எருமை மற்றும் பசு மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
சிலர் இதை தொழிலாகவும் செய்து வருகின்றனர். தற்போது நாமக்கல் பகுதியில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. இந்நோய்க்கு ஐந்து மாடுகள் இதுவரை இறந்துள்ளன.
இதனால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தாக்கி விடும் என பயந்து மாடுகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் மாடுகள் விற்பனைக்கு வந்தது. கோமாரி நோய் தடுப்புக்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மாடுகளை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அதை கட்டுப்படுத்த புதன்சந்தை, புதுசத்திரம் பகுதியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு முகாம் அமைத்து இந்நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.