ஈரோட்டில் செவ்வாழை உற்பத்தி அதிகரிப்பு

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (12:45 IST)
webdunia photoWD
ஈரோடு மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் செவ்வாழையை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் வாழை ஆகிய பயிர்களை முக்கியபயிர்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.

வாழை பயிரிடும் விவசாயிகள் ரொபஸ்டா, கதளி ஆகியவைகள் மட்டுமே அதிகமாக பயிரிட்டு வந்தனர். இந்த ரொபஸ்டா மற்றும் கதளி ரகங்கள் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அதிகமாக ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

ரொபஸ்டா மற்றும் கதளி ரகங்கள் தார் ஒன்று சராசரியாக ரூ.120 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஆனால் செவ்வாழை தார் ஒன்று ரூ.520 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சாதாரண ரகங்களை காட்டிலும் செவ்வாழை பமடங்கு வருமானம் கொடுப்பதால் சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் தற்போது செவ்வாழையே அதிகமாக பயிரிட்டு வருகின்றனர்.

மேலும் சாதாரண ரொபஸ்டா ரகங்களை விட செவ்வாழை சீக்கிரம் பழுத்து அழுகிவிடாத நிலை உள்ளதால் விலை கிடைக்கவில்லை என்றால் ஒரிரு நாட்கள் காத்திருந்து விற்பனை செய்யும் வாய்ப்பும் செவ்வாழையில் இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்