சந்தைக்கு கோதுமை வரத்து அதிகரிப்பு!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (15:42 IST)
மொத்த விற்பனைச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கோதுமஅதிக அளவு கொண்டு வரப்படுவதால் விலை உயராது என்று தெரிகிறது.

ஆசியாவின் பெரிய தாணிய சந்தையான பஞ்சாப் சந்தையில் கோதுமை வரத்து அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து போதிய அளவு கோதுமை வரத்து உள்ளது. இங்கு தற்போது ஒரு டன் கோதுமை ரூ.9,450 என்ற அளவில் விற்பனை ஆகின்றது. இது குறுகிய காலத்திற்கு அதிகரித்து ரூ.10,000 ஆக உயரலாம் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இங்கு சராசரியாக தினமும் 100 டன் கோதுமை விற்பனைக்கு வருகின்றது. விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள், வியாபாரிகள், புரோக்கர்கள் கணிசமான அளவு கோதுமையை இருப்பில் வைத்துள்ளனர். இவர்கள் 4 முதல் 5 இலட்சம் டன் வரை இருப்பில் வைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் கோதுமை டன் ரூ.10,000 என (வரி நீங்கலாக ) உயர்ந்தவுடன் விற்பனை செய்யலாம் என காத்திருக்கின்றனர். இப்பொழுது இருப்பில் உள்ள கோதுமைதான் விற்பனைக்கு வருகின்றது. அதிக காலம் இருப்பில் வைத்திருப்பதால் பூசானம் பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. அத்துடன் விலை அதிகரிக்கும் போது கோதுமை வரத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உள்நாட்டில் போதிய அளவு கோதுமை இருப்பில் உள்ளது. பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மாவு ஆலைகளிடம் போதிய அளவு கோதுமை இருப்பில் இருக்கின்றது.

இதனால் மாவு ஆலைகள் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். எனவே விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை என மற்றொரு தரப்பு வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

சென்ற வருடம் ஃப்யூச்சர் மார்க்கெட் எனப்படும் முன் விலை நிர்ணயிப்பு முறை இருந்தது. இந்த வருடம் முன் விலை நிர்ணயிப்பு சந்தையில் கோதுமை இல்லை. எனவே செயற்கையாக விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லை என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இந்த வருடம் கோதுமை உற்பத்தி, சென்ற வருடத்தைவிட அதிகமாக இருக்கும். சென்ற வருடம் சுமார் 693 இலட்சம் டன் உற்பத்தியானது. இந்த வருடம் சுமார் 740 இலட்சம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாய விளைபொருட்கள் விலை நிர்ணயிப்பு ஆணையம் கோதுமைக்கு 2007-08 ரபி பருவத்திற்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,000 ஆக (டன் ரூ.10,000) நிர்ணயிக்க வேண்டும் மத்திய அரசிடம் பரிந்துரைக்க உள்ளது. இது பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு மாநில அரசுகள், மற்றும் திட்ட குழுவிடம் கருத்து கேட்டுள்ளது.

மத்திய அரசு கோதுமை குறைந்த பட்ச ஆதரவு விலையை ரூ.1,000 ஆக சம்மதித்தால், இது சென்ற வருட ஆதார விலையான ரூ 850-தை விட ரூ.150 அதிகம். ( ஆதார விலை ரூ.750, போனல் ரூ.100).

வெப்துனியாவைப் படிக்கவும்