உப்புக் கலப்பு உள்ள மண்ணிலும் விளையக்கூடிய விதை நெல்லை உருவாக்கியுள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், அதனை நடைமுறை ரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது!
உப்புக் கலப்பு மிகுந்த நன்செய் நிலங்களிலும் விளையும் தன்மையைக் கொண்ட இந்த நெல்லிற்கு உப்புக் கலப்பால் பாதிக்கப்படாமல் விளையக்கூடிய தன்மையை மரபணு மாற்றத்தின் மூலம் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செய்துள்ளது.
சென்னை தரமணியில் உள்ள மா.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர், இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் சதுப்பு நிலங்களில் இருந்து பெறப்பட்ட மரபணு கூறுகளைக் கொண்டு இந்த புதிய வகை நெல் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த புதிய வகை நெல்லை கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையத்தில் உள்ள நிலத்தில் விதைக்கப்பட்டு ஆய்வு நடந்து வருவதாகக் கூறிய கேசவன், புவி வெப்பமடைதலால் கடல் மட்டம் உயர்ந்து அதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் உள்ள நிலங்களில் உப்புத் தன்மை பெருகுவதனால் ஏற்படும் சவாலை சமாளிக்க இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதை நெல் உருவாக்கப்பட்டதாகக் கூறினார்.