தஞ்சையில் 240 ஹெக்டேரில் எண்ணைய்ப் பனை சாகுபடி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு எண்ணைய்ப் பனை மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிதாக 240 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணைய் பனை சாகுபடி செய்யப்பட உள்ளது. இதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மு. ஜோதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு :- மாவட்டத்தில் 1994 - 95 ஆம் ஆண்டு முதல் எண்னைய்ப்பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் எண்ணைய் பனைக் குலைகளைக் கொள்முதல் செய்யப்படாதாலும், எண்ணைய்ப் பிழியும் ஆலை இல்லாததாலும் சாகுபடி செய்த மரங்களை விவசாயிகள் அழித்தனர்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அரியலூர் அருகே வாரணவாசியில் காவேரி எண்ணைய்ப்பனை நிறுவனத்தினர் ஆலை அமைத்தது தொடர்ந்து பழக்குலைகளைக் கொள்முதல் சய்து வருகின்றனர். எண்ணைய்ப் பனை மட்டுமே மாதம் இரு முறை வருமானம் தரும் சிறந்தப் பயிராகும். எனவே நிரந்தரத் தொடர் வருமானம் பெற இப்பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறலாம். மாவட்டத்தில் எண்ணைய்ப்பனை சாகுபடி பரப்பை 240 ஹெக்டேர் அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி வட்டவாரியாக அதிகரிக்கப்பட உள்ள சாகுபடி பரப்பு : தஞ்சாவூர் -15, பூத்லூர்-15, திருவையாறு-24, ஒரத்த நாடு-14, திருவோணம்-20, பட்டுக்கோட்டை-20, மதுக்கூர்-14, பேராவூரணி-17, சேதுபாவாசத்திரம்-17, பாபநாசம்-12, அம்மா பேட்டை-18, கும்பகோணம்-24, திருவிடைமருதூர்-20, திருப்பனந்தாள்-10.

இத்திட்டத்தில் முதல் ஆண்டு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7,150 மதிப்புடைய கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். மேலும் ரூ. 4,140 சாகுபடி தொகையாக வழங்கப்படும். 2 ஆம் ஆண்டு ரூ. 2,450, 3 ஆம் ஆண்டு ரூ. 2,800, 4 ஆம் ஆண்டு ரூ. 3,250 மதிப்புக்குரிய உரங்கள், இடு பொருள்கள் மாளிய விலையில் அளிக்கப்படும்.

ஆக மொத்தம் ரூ. 19,790 மதிப்புள்ள கன்றுகள் மற்றும் உரங்கள் மானியத்தில் வழங்கப்படும். எனவே புதிதாக எண்ணைய்ப்பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதி வேளாண்மை வளர்ச்சி அலுவலரை அணுகி எண்ணைய்ப்பனை நாற்றுகளைப் பெற்று நடவு செய்து பயனடையலாம். மேலும் எண்ணைய்ப்பனை சாகுபடி குறித்த தொழிற்பயிற்சி இம்மாத கடைசி வாரத்தில் திருவையாறு, பேராவூரணி கோட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே அப்பகுதிகளைச் சேர்ந்த ஆர்வமுடைய விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் வளர்ச்சி அலுவலர் அல்லது உதவி இயக்குநரை அணுகி பயிற்சியில் பங்கு கொள்ளலாம் என்றார் மு. ஜோதி.

வெப்துனியாவைப் படிக்கவும்