பாஜக பிரச்சார கூட்டங்களில் இலவச டீ கொடுக்க கூடாது - தேர்தல் ஆணையம்

வெள்ளி, 14 மார்ச் 2014 (16:10 IST)
பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டங்களில், குறிப்பாக நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இலவசமாக டீ கொடுக்கப்படுகின்றது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேர்தல் ஆணையம், இனி பாஜக கூட்டங்களில் இலவச டீ கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
FILE

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரித்து நாடெங்கும் நமோ டீ கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர பாஜக பிரச்சார கூட்டங்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்த இலவசமாக டீ வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட உத்தரபிரதேசத்தில்தான் பாஜக பிரச்சார கூட்டங்களில் அதிக அளவில் இலவச டீ வழங்கப்படுகிறது.

மோடி பெயரில் இலவச டீ கொடுப்பதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார்கள் தெரிவித்தன. இதையடுத்து உத்தரபிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா இதுபற்றி ஆய்வு செய்தார். பிறகு அவர் பாஜக பிரச்சார கூட்டங்களில் இலவச டீ வினியோகம் செய்யக்கூடாது என்று தடை விதித்தார்.

இலவசமாக டீ கொடுப்பதால் வாக்களர்கள் மனநிலை மாறும். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா கூறினார்.

இலவச டீ கொடுப்பதை தடை செய்யும் நடவடிக்கைக்கு உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை பாரபட்சமானது என்று அவர் குற்றம்சாற்றியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் சமாஜ்வாடி கட்சியின் டிஜிட்டல் டைரி கொடுத்து வருகிறார்கள். அது தேர்தல் அதிகாரி கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்