சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம், ஊடகக்கலைகள் துறை எம்.ஏ. பட்டப்படிப்பு மாணவர்கள், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினர்.
39 தொகுதிகளிலும் கடந்த 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடந்த இந்த ஆய்வில், தொகுதிக்கு 150 பேர் வீதம் 5,850 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. எந்த கூட்டணிக்கு அதிக வாய்ப்பு என்பது குறித்தும் கருத்துக்கள் அறியப்பட்டன. இதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு :
இன்றைய நிலையில், மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று 34.5 விழுக்காடு வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் தி.மு. க.வுக்கு 26.5 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்கு 6.4 சதவீதமும், விடுதலை சிறுத்தைகளுக்கு 1.2 சதவீதமும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.4 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. அணி வெற்றி பெறும் என்று 34.9 சதவீத வாக்காளர்கள் கூறி உள்ளனர். அதன்படி அ.இ.அ.தி.மு.க. அணிக்கு 0.4 சதவீதம் ஆதரவு அதிகம் உள்ளது. இதில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 27.3 சதவீத ஆதரவும், ம.தி.மு.க.வுக்கு 2.4 சதவீதமும், பா.ம.க.வுக்கு 3 சதவீதமும், மார்க்சிஸ்டு கட்சிக்கு 1.2 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 சத வீதமும் ஆதரவும் இருக்கிறது.
பா.ஜ.க கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 3.1 சதவீத ஆதரவும், சமத்துவ மக்கள் கட்சி சேர்ந்தால் அதற்கு 0.4 சதவீத ஆதரவும் இருப்பது தெரிய வந்துள்ளது. தனித்து போட்டியிடும் தே.மு.தி.க.வுக்கு 12.3 சதவீத வாக்காளர்கள் ஆதரவு இருக்கிறது.
மற்ற கட்சிகள், சுயேட்சைகளுக்கு 1.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 13.1 சதவீத வாக்காளர்கள் எந்த கட்சிக்கும் ஓட்டுப்போடுவது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் தி.மு.க. ஆட்சி திருப்தியாக இருக்கிறது என்று 47.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். 44.6 சதவீதம் பேர் அதிருப்தி இருப்பதாக கூறி உள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி திருப்திகரமாக இருந்தது என்று 43.3 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். சரியில்லை என்று 42.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை பிரச்சனையை தீர்ப்பது யார் என்ற கேள்விக்கு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி என்று 32 சதவீதம் பேரும், தி.மு.க. கூட்டணி என்று 14.1 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். பிரச்சனைகளை தீர்த்து வைப்பது தி.மு.க. அணி என்று அதிக வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய அளவில் வேலை இல்லா திண்டாட்டத்தை காங்கிரஸ் அணி தீர்த்து வைக்கும் என்று 22.4 சதவீதம் பேரும், பா.ஜனதா அணி தீர்க்கும் என்று 20.9 சதவீதம் பேரும், 3-வது அணிக்கு ஆதரவாக 19.6 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
விலைவாசி, மின்வெட்டு போன்ற பிரச்சனைகளில் தற்போது மக்களிடம் வேகம் இல்லை. இலங்கையில் தற்போது நடந்து வரும் போர் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய- மாநில அரசுகள் மீது பொதுமக்கள் ஆதரவும் எதிர்ப்பும் ஓரளவு சமமாக உள்ளது. ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பெரிய அளவில் “அலை” எதுவும் இல்லை.
இலங்கை தமிழர் பிரச்சனை பிரசாரத்தில் எடுத்துச் செல்லப்படும் விதம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பிரசார வியூகங்கள், வேட்பாளர்கள் செல்வாக்கு, தொகுதி அளவில் வாக்காளர்களை கவரும் செயல்பாடுகள் ஆகியவை நடுநிலையாளர்களின் ஓட்டுக்களாக மாறி வெற்றி- தோல்வியை நிர்ணயம் செய்யும் என்று லயோலா கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.