கால்நடை ஆய்வாளர் பணிகளுக்கு ஆளெடுப்பு!

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:35 IST)
நாமக்கல்: கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாமக்கல்லில் கூறுகையில், இப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பள்ளி மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார்.

முஸ்லிம் இன பிற்பட்ட வகுப்பினர், இந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த முஸ்லிம் இன பிற்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை உள்ளவர்கள் 2008 மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளும், முன்னுரிமையற்றவர்கள் 1994 டிசம்பர் 31-க்குள்ளும், இந்து மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமையற்றவர்கள் 1989 ஜுன் 30-க்குள்ளும் பதிவு செய்து இருக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த பதிவு மூப்பிற்குள் வரும் பதிவுதாரர்களின் பட்டியல்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணை யருக்கு அனுப்பப்பட்டு மாநில அளவிலான பட்டியல்
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையருக்கு அனுப்பப்படும் என்று ரவீந்திரன் மேலும் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட பதிவு மூப்பிற்குள் வரும் அனைத்து பதிவுதாரர்களும், தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை, அனைத்து கல்வி சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று சரி பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்