அறிவுசார் அயல்பணித் துறையில் பணியாளர் பற்றாக்குறை: அசோசெம் தகவல்!
அறிவுசார் அயல்பணித் துறையின் வளர்ச்சியால் வரும் 2012 ஆம் ஆண்டில் 15 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் வரும் என்று ஆய்வுகள் தெரிவித்த நிலையில், ஆட்கள் பற்றாக்குறையால் 30 விழுக்காடு வருவாய் குறைந்து 10.5 பில்லியன் டாலர் அளவுக்குத்தான் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அறிவுசார் அயல் பணித்துறையில் (Knowledge Process Outsourcing -KPO) மேற்கொண்ட ஆய்வில், போதுமான திறன்மிக்க தொழில்நூட்ப வல்லுநர்களை இன்னும் இனங்கண்டறியாமல் இருப்பதும், இத்துறைக்குத் தேவையான அளவுக்கு ஆட்களை உருவாக்க சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உருவாக்காததே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அறிவுத்திறன் கொண்ட பணியாளர் தட்டுப்பாடு மட்டுமல்லாது, பிலிப்பைன்ஸ், சீனா, போலந்து, ஹங்கேரி, ரஷ்யா ஆகிய நாடுகளில் இத்துறையின் வளர்ச்சி நமக்கு போட்டியாக உள்ளது.
தற்போதைய நிலையில் இத்துறை ஆண்டுக்கு 18 முதல் 20 விழுக்காடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதுடன், 3.8 பில்லியன் டாலர் வருவாய் வந்துக் கொண்டிருப்பதாவது நிலைக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அசோசெம் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது உள்ள 30,000 இடங்களுக்கு பதிலாக 1 லட்சம் பேர் வரும் காலங்களில் தேவைப்படுவார்கள் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் அறிவுசார் அயல்பணித் துறைக்கு கல்வியறிவு பெற்ற, அனுபவம் வாய்ந்த, திறமைவாய்ந்த பணியாளர்கள் அலுவலக அயல் பணித்துறைக்கு கிடைப்பது எளிதானதாக இல்லை. அதே நேரத்தில் இதுபோன்ற வல்லுநர்களுக்கும் இந்தியாவில் தட்டுப்பாடும் கிடையாது.
ஆனால் அறிவுசார் அயல்பணித் துறையினர் இத்துறைகளில் பணி செய்ய தகுதியானவர்களின் தொகுப்பு ஒன்றை முதலில் உருவாக்கி பின்னர் தேவைப்படும் இடங்களுக்கு ஆட்களை அதில் இருந்து நிரப்ப வேண்டும். தற்போது அறிவுசார் அயல்பணித் துறையினர் தேவையான ஆட்கள் கிடைக்காமல் இருந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை என்று அசோசெம் தலைவர் வேணுகோபால் என்டோத் கூறினார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் செலவுகள் அதிகரிப்பதுடன் இந்திய அறிவுசார் அயல்பணி நிறுவனங்கள் போட்டியிடுவதற்கான சூழல் குறையும் நிலை உருவாகியுள்ளது.
இதனை எதிர்கொள்ள நம் நிறுவனங்கள் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களை நாடும் நிலை உருவாகலாம் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 260 அறிவுசார் அயல்பணி நிறுவனங்கள் உள்ளன. இது 2008 -ஆம் ஆண்டில் 350 ஆக உயர்வதுடன் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அலுவலக அயல்சார் பணித் துறையை விட அறிவுசார் அயல் பணித்துறையில் 12 முதல் 15 விழுக்காடு ஊதியம் அதிகமாக இருக்கும். மேலும் தொடக்க நிலை ஊதியமும் இத்துறையில், அலுவலக அயல்சார் பணித்துறையை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.