பட்டு நூல் விவசாயிகளுக்கு புதிய தொழில் துவங்க கடனுதவி

Webdunia

சனி, 8 செப்டம்பர் 2007 (12:59 IST)
பட்டநூல் விவசாயிகளுக்கு தொழில் துவங்க கடனுதவி

பாரத பிரதமர் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்டு புழு விவசாயிகளுக்கு பட்டு நூற்பாலை மையம் துவங்க ரூ. 5 லட்சம் வரகடன் வழங்கப்படுகிறது என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏகாம்பரம் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பட்டு நூல் உற்பத்தி தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட தொழில் மைய பொதமேலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியது, ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் பவானி சாகர் ஆகிய பகுதிகளில் பட்டுப் புழு வளர்ச்சிக்காக மல்பெரி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உற்பத்தியாகும் பட்டுககூடுகளை கர்நாடக மாநிலத்துக்கோ அல்லது கோவை மாவட்டத்துக்கோ எடுத்து சென்று விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பணமும் நேரமும் கூடுதலாகிறது.

பட்டுககூட்டை உற்பத்தி செய்பவர்களே பட்டு நூற்பாலை அமைத்தால் அதிக லாபம் கிடைப்பதுடன் இந்த பகுதியில் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.

அடுத்த ஆண்டில் மாவட்டத்தில் 10 இடங்களில் ஐந்து அடிப்படை பட்டு நூற்பாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 5 லட்சம் வரை எந்த விதமான சொத்து பிணையமும் இல்லாமல் பிரதமர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

இதில் ஐந்து அடிப்படை பட்டு நூற்பாலைக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், செட் அமைக்க ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரமும், மீதியுள்ள ரூ. ஒரு லட்சம் தொழில் வளத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசு மூலமாகவும் ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை பயன்படுத்தி நீங்கள் சுயமாக தொழில் துவங்க முயற்சி செய்ய வேண்டும். உற்பத்தி சார்ந்த தொழிலான பட்டு நூற்பாலை மையம் அமைக்க வழங்கப்படும் தொகையில் ஐந்து முதல் 16.25 வரை பயனாளியின் பங்கு தொகை இருக்கும்.

மானியமாக திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் (ரூ. 12 ஆயிரத்து 500) வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பும் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மகளிர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உடல் ஊனமுற்றோர 45 வயது வரை இருக்கலாம். கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பம் இலவசமாக மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



ரெவின்யூ ஸ்டாம்ப் தட்டுப்பாடு: பொதுமக்கள் பாதிப்பு

ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட தபால் நிலையங்களில் "ரெவின்யூ' ஸ்டாம்ப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மாத ஊதியம் பெறும்போது ரூ.1 மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்திட வேண்டும். அதேபோல் தனியார் நிதி நிறுவனங்கள், பதிவாளர் அலுவலகம், வங்கிகளிலும் ரெவின்யூ ஸ்டாம்ப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் நகரம், கிராமப் புறங்கள் உட்பட அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. சில மாதங்களாக ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையம் உட்பட சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமப்புற தபால் நிலையங்களிலும் ரெவின்யூ ஸ்டாம்பிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதநேரம் தனியார் கடைகளில் ரெவின்யூ ஸ்டாம்ப் எவ்வித தட்டுப்பாடுமின்றி எளிதாக கிடைக்கிறது. தபால் நிலையங்களில் நிலவும் தட்டுப்பாடை பயன்படுத்திக் கொள்ளும் கடைக்காரர்கள் ரூ.1க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ரெவின்யூ ஸ்டாம்பை நான்கு மடங்கு விலை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்' என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ரூ.1க்கு விற்கப்பட வேண்டிய ரெவின்யூ ஸ்டாம்ப் ரூ. 5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு தபால் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களே காரணம். வணிக நிறுவனத்தாரிடம் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தபால் நிலையங்களுக்கு வரும் ரெவின்யூ ஸ்டாம்புகளை மொத்தமாக விற்பனை செய்துவிடுகின்றனர் எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்