சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு மற்றும் செவிலியர் உதவியாளர் பயிற்சி விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொற்றுநோய் மருத்துவமனையில் 2007-08க்கான மருத்துவ ஆய்வக பட்டயப்படிப்பு மற்றும் செவிலியர் உதவியாளர் (பெண்கள் மட்டும்) பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இப்பயிற்சிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் மற்றும் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மட்டும் நடத்தப்படும் பயிற்சிகளாகும்.
இப்பயிற்சிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் அல்லது வாழ்க்கை தொழிற்கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வகவியல் பயின்றவர்களாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திலும் பொதுப் பிரிவினர் 65 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 60 சதவீதமும், மிக பிற்படுத்தப்பட்டவர்கள் 55 சதவீதம், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
17 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்கப்படும். மாதக் கல்விக் கட்டணம் ரூ.300.
பெண்களுக்கு மட்டுமான செவிலியர் உதவியாளர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 மாதங்கள் தமிழில் பயிற்சி அளிக்கப்படும். மாதக் கல்விக்கட்டணம் ரூ.75.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-81 என்ற முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜூன் 7 முதல் ஜூலை 2 வரை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 2-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.