வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது என்றும் எனவே இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விரைவில் சான்றுகள் வழங்கப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இரவு நேரத்தில் வந்து சிரமப்பட வேண்டாம்.
காலை 8 மணி முதல் பதிவுசெய்யும் பணி தொடங்குகின்றன. எனவே காலை 8 மணிக்கு வந்தால் போதும். பதிவு செய்யப்படும் அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கப்படும்.
பதிவு செய்ய வருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை கல்வித்தகுதி மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் பயிற்சி 2 வருட மதிப்பெண் பட்டியல், பட்டய சான்றிதழ், மற்றும் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.), சாதி சான்றிதழ் ஆகியவற்றின் மூலச்சான்றிதழ் இவற்றுடன் குடும்ப அடையாள அட்டையின் நகலில் ஏதாவது ஒரு அத்தாட்சி பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வரவேண்டும்.
ஏற்கனவே பொது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் பதிவு அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
வேறு மாவட்டங்களில் பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிக்காமல் விட்டிருந்தால் அந்த பதிவை ரத்து செய்து அலுவலகத்தில் சான்று பெற்று வரவேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. எனவே இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.