வேலூரில் டிச.18 முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு!
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:20 IST)
ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் டிசம்பர் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவு வேலைகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 18ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
பிளஸ்-2 படிப்பில் அறிவியல் பாடங்களையும் கணிதத்தையும் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் அவசியம். வயது 23-க்குள் இருக்க வேண்டும். 165 செ.மீ. உயரம் தேவை. மார்பளவு குறைந்தபட்சம் 77-82 செ.மீ. என்ற அளவில் விரிவடைய வேண்டும்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 18ஆம் தேதி அன்றும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 20ஆம் தேதி அன்றும் வர வேண்டும். அதிகாலை 5.30 மணிக்கே முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.