வேலைவாய்ப்பற்றோருக்கு இலவச தொழிற்பயிற்சி!
சனி, 6 டிசம்பர் 2008 (12:40 IST)
படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு தாட்கோ மூலம் உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் சுடலைக்கண்ணன் தெரிவிக்கையில், 2008-2009ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் உடனடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இலவசத்தொழிற்பயிற்சி திட்டத்தின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு விஷூவல் மீடியா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு நேர்காணல் அரியலூர் செல்லமுத்து நாயக்கர் தெருவில் உள்ள ஜெய்ராம் இன்போடெக் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. பயிற்சி காலம் 1 வருடமாகும். இப்பயிற்சியில் சேர 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நேர்காணல் வருகிற 8ஆம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் சேர பயிற்சிக்கான கல்வித்தகுதி உடையவர்கள் மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்களுடன், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தைச்சேர்ந்த 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் நேரடி நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் தகுதிஅடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.400 உதவித்தொகை பயிற்சிக்காலத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.