இந்திய விமானப்படை பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு!
புதன், 3 டிசம்பர் 2008 (17:04 IST)
இந்திய விமானப்படை பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் (டெக்னிக்கல் டிரேட்ஸ்) பணியிடங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த திருமணமாகாத 1.1.1988 முதல் 31.3.1992ல் பிறந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியின் நிலை: குரூப் எக்ஸ் தொழில் பிரிவு. கல்வித்தகுதி, பிளஸ்-2 மேல்நிலை கல்வியில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டு பொறியியல் பட்டய படிப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கணிப்பொறி இன்ஸ்ட்ருமெண்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவில் ஏதாவது ஒன்றில் குறைந்தது 50 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கோவை மாவட்டம் சூலூர் இந்திய விமானப்படை நிலையத்தில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நாளான ஜனவரி மாதம் 23ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணிக்குள் ஆஜராக வேண்டும்.
தேர்வுக்கு வரும்போது, தகுதியான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் தேசிய மாணவர் படை சான்றிதழ் (இருந்தால் மட்டும்), அனைத்து சான்றிதழ்களுக்கான 3 பிரதி உண்மை நகல்கள், இருப்பிடச்சான்று, தற்போது எடுக்கப்பட்ட 7 பாஸ்போர்ட் அளவிலான வண்ண புகைப்படம், அஞ்சல் தலை ஒட்டாத நல்ல நிலையில் உள்ள 2 வெள்ளை உறைகள், உடல் தகுதிக்கு தேர்வு செய்யும்போது பயன்படுத்தப்படும் உடைகள் (ஷார்ட்ஸ் மற்றும் ஷூ) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.