அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 394 மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் மருத்துவ காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர்கள் பட்டியல் பெற்று, கடந்த அக்டோபர் மாதம் நேர்காணல் நடத்தப்பட்டு 350 மருத்துவ அலுவலர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 394 மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு வருகிற நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல், கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வில் பங்கு கொள்ள 868 நபர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து, அழைக்கப்பட்ட நாட்களில் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.