இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (12:29 IST)
அஞ்சல் அலுவலக மற்றும் அஞ்சல் பிரிப்பு அலுவலக உதவியாளர்கள் ஆர்மி போஸ்டல் சர்வீஸில் பணிபுரிவதற்காக நேரடி தேர்வு மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில், ஆர்மி போஸ்டல் சர்வீஸில் பணிபுரிவதற்காக அஞ்சல் அலுவலக மற்றும் அஞ்சல் பிரிப்பு அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, நேரடி தேர்வுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 70. இதில் ஓ.பி.சி பிரிவினருக்கு 35 இடங்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு (எஸ்.சி.) 13 இடங்களும், பழங்குடியினத்தவர்களுக்கு (எஸ்.டி.) ஒரு இடமும், இதர பிரிவினருக்கு 35 இடங்களும், முன்னால் ராணுவத்தினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து இறக்குமதி செய்துக் கொள்ளலாம். இப்பதவிகளுக்கு பெண்களும், ஊனமுற்றவர்களும் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான தகவல் குறிப்பேட்டினை அனைத்து தலைமை அஞ்சலகங்கள் மற்றும் தாலுகா தலைமையிடங்களில் உள்ள துணை அஞ்சலகங்களில் ரூ.25 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றிதழ் நகல்களுடன் பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 24.11.2008-க்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
மற்ற முறைகள் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களும், 24.11.2008-க்கு பிறகு வந்து சேரும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.
இத்தகவலை தமிழ்நாடு அஞ்சல் வட்ட, முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.