கணினி தொழிற்கல்வி பயிற்றுநர் தேர்வர்களுக்கு நாளை கலந்தாய்வு துவக்கம்!
வெள்ளி, 7 நவம்பர் 2008 (11:23 IST)
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கணினி தொழிற்கல்வி பயிற்றுநர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 1,677 தேர்வர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான 2 நாள் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2008-09 கல்வியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கணினி தொழிற்கல்வி பயிற்றுநர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 1,677 தேர்வர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாகக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை என்ற முகவரியில், கணினி பாடப் பிரிவில் நவம்பர் 8,9ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6.45 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு வருபவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பெறப்பட்ட தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.