ஊனமுற்ற பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்: தமிழக அரசு உத்தரவு!
வியாழன், 23 அக்டோபர் 2008 (11:43 IST)
சென்னை : தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழஙக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், முதலமைச்சர் கருணாநிதியை 19.8.08 அன்று சந்தித்து பல கோரிக்கைகளை வைத்தனர். பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் அவற்றில் ஒன்றாகும்.
இந்த அறிவிப்புக்கான உரிய ஆணைகளை வெளியிட வேண்டும் என்று அரசை ஊனமுற்றோருக்கான ஆணையர் கோரியுள்ளார். தமிழக அரசால் அவரது கருத்துரு பரிசீலிக்கப்பட்டது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்க அரசு ஆணையிடுகிறது.
அனைத்துத் துறை தலைவர்களும் இந்த ஆணையை தவறாது பின்பற்றுமாறும், இந்த ஆணையின்படி தொகுப்பு ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்துக்கு கொண்டு வரப்படும் ஊனமுற்றோர் சார்பாக ஏதேனும் விதிகள் தளர்வு செய்யப்பட வேண்டுமானால் அந்தந்த துறைத் தலைவர்கள், அந்தந்த தலைமைச் செயலக நிர்வாகத் துறைகளின் ஒப்புதல் பெற்று, பின்னர் அவர்களின் பணியை வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.