தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 12 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பி.ஹெச்.டி. சேம்பர் என்ற வணிக அமைப்பு நடத்திய ஓய்வு ஒன்றில், கடந்த 1995- 96 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த செலவில் மாநில அரசுகள் 20 விழுக்காட்டை கல்விக்காக ஒதுக்கியதாகவும், 2007- 08 ஆம் ஆண்டில் இது 18 விழுக்காடாகக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவருக்கு கல்விக்கென ஒதுக்கப்படும் நிதி மாநிலத்திற்கு மாநிலம் வேறு படுகிறது. 2005 ஆம் ஆண்டு கணக்கின்படி கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.1,034 ஆகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரூ. 1,777 ஆகவும் இருந்தது.
பீகார், உத்தரப்பிரதேசத்தில் தனி நபரின் கல்விக்கு செலவிடப்படும் தொகை கணிசமாகக் குறந்துள்ளது. பீகாரில் ரூ.487 ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் ரூ. 483 ஆகவும் உள்ளது.
கல்வி, வருவாயில் முன்னேறியுள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒட்டு மொத்த வருவாய் அதிகரித்துள்ளபோது, அதற்கேற்ப கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை.
கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருவதால் நாட்டின் பல மாநிலங்களில் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி கட்டமைப்பை பாதித்துள்ளதாகவும், இதனால் கல்வித் தரமும் பாதிக்கபடும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுளது.
கல்வித்துறையில் நாடு முன்னேறவேண்டுமெனில் பள்ளிகள், அதற்கான கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பெருக்க, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பி.ஹெச்.டி. சேம்பர் யோசனை தெரிவித்துள்ளது.