பழங்குடியின ஆசிரியர் பணி: 482 பேருக்கு நியமன உத்தரவு!
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:53 IST)
ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 482 பேர், சிறப்பு நியமனம் மூலம் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கான நியமன உத்தரவுகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், "கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பிரச்சனை எழும்போது பின்தங்கிய மக்கள், முன்னேறிய மக்கள் என்றுதான் பகுத்துக் கூறப்படுவது வழக்கம். 'பின்தங்கிய மக்கள்' என்ற வார்த்தைக்குப் பதில் `பிற்படுத்தப்பட்டோர்' என்ற சொல் திராவிட இயக்கத்தால் பயன்படுத்துகிறது என்றார்.
பின்னடைவு, பின்தங்கல், தாழ்ந்து போதல் ஆகியவை மனித சமுதாயத்தின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் மாத்திரம் கெடுக்கக் கூடியவையல்ல; அவர்களுடைய சுயமரியாதையையே கெடுக்கக் கூடியவை. எனவே எவரும் பின்னடைவுக்கு ஆளாவதோ, அல்லது பின்தங்குவதோ கூடாது என்று கருணாநிதி குறிப்பிட்டார்.
ஒரு காலத்திலே, படித்தவர்கள் நூற்றுக்கு மூன்று பேராக இருந்தனர். மற்றவர்கள் 97 பேராக இருந்தனர். மூன்று பேராக இருந்த நாம் இன்று 97 பேராக மாறியிருக்கிறோம் என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, ஆற்காடு வீராசாமி, நேரு, எ.வ. வேலு, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.