கல்வியுதவி பெற வருமானச் சான்றிதழ் தேவையில்லை!

சனி, 27 செப்டம்பர் 2008 (13:50 IST)
முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்களை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுகளில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஆணையிட்டது.

இந்த உதவித் தொகையைப்பெற 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். ஐ.டி.ஐ. மாணவர்கள் எனில் பெற்றோர் வருவாய் ரூ.2 லட்சத்திற்குள்ளும், தொழில்கல்வி, தொழில் நுட்பக் கல்வி எனில் பெற்றோர்கள் வருவாய் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.

இதனால் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் அளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. வருவாய் அலுவலரின் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ் ஆகியவற்றை மாணவர்கள் அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதற்கிடையே இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் முதலமைச்சர் கருணாநிதியை அண்மையில் சந்தித்து, வருவாய்ச் சான்றிதழ் இல்லாமல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

இதை உடனடியாக ஏற்று, வருமானச் சான்றிதழ் இல்லாமல் கல்வி உதவித் தொகை வழங்கலாம் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சிறுபான்மையினத்தவர் என்பதற்கான ஜாதி பற்றிய விவரங்கள் ரூ.10 மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதிமொழியுடன், கையொப்பமிட்டு சமர்ப்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்