'இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்கக்கூடாது'

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (12:15 IST)
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இம்ப்ரூவ்மெண்ட் அடிப்பையில் வெளி மாநில மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-08 ஆம் ஆண்டு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு அடிப்படையில் வெளி மாநில மாணவர்கள் தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இவர்களின் சேர்க்கையை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நிராகரித்தது.

இம்முடிவை எதிர்த்து சம்மந்தப்பட்ட மாணவர்கள், மற்றும் 30-க்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கடந்த 2007-08 ஆம் ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக இருந்த இடங்களில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதிய வெளி மாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களின் சேர்க்கையை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் நிராகரித்துவிட்டார்.

ஆனால், 2007-08-ம் ஆண்டு விளக்கல் குறிப்பேட்டில் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதிய மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று எந்த குறிப்பும் இல்லை. இதுதொடர்பாக 20.11.2007-ல் தான் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. எனவே இம்ப்ரூவ்மென்ட் தேர்வு அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை நிராகரிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் நீதிபதி எஸ். நாகமுத்து அளித்த தீர்ப்பு: தமிழகத்தில் தற்போது இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு முறை அமலில் இல்லை. எனினும் 2007-08 ஆம் ஆண்டு விளக்க குறிப்பேட்டில் இதுகுறித்த நிபந்தனை விதிக்கப்படவில்லை. நிபந்தனை தெரிந்திருந்தால் மாணவர்கள் ஒருவேளை சேர்ந்திருக்க மாட்டார்கள்.

இவ்வளவு நாட்களுக்குப்பின் இம்ப்ரூவ்மெண்ட் மாணவர்களை கல்லூரிகளில் இருந்து நீக்கினால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கும். எனவே அந்த மாணவர்களின் சேர்க்கைக்கு தொழில் கல்வி இயக்குனரகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். வருங்காலத்தில் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதிய மாணவர்களை சுயநிதிக் கல்லூரிகள் சேர்க்கக்கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்