பிரிட்டன் செல்லும் தென்னிந்திய மாணவர்கள் அதிகரிப்பு!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (16:13 IST)
தென்னிந்தியாவில் இருந்து உயர் கல்வி பயில்வதற்காக பிரிட்டனுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

பிரிட்டன் அரசின் கல்விக் குழுவும், புதுச்சேரியில் உள்ள பிரிட்டன் தூதரகமும் இணைந்து, புதுவையில் உள்ள கல்வி நிறுவங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரதரப்பட்ட கல்வியாளர்களை சந்தித்து கலந்துரையாடியது.

பிரிட்டனில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள், மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புதுச்சேரி கல்வி நிறுவனங்களுக்கு பிரிட்டன் குழு எடுத்து விளக்கியது.

இதன் பின்னர் பிரிட்டன் கல்வித்துறையின் தென்னிந்தியப் பிரிவு அதிகாரி எல். தனசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயம்பத்தூர், கொச்சி, மங்களூரு, புதுச்சேரி போன்ற நகரங்களில் இருந்து பிரிட்டனுக்கு மாணவர்கள் அதிகம் செல்லத் தொடங்கியுள்ளனர் என்றார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு பிரிட்டனுக்கு சென்ற தென்னிந்திய மாணவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், இது நடப்பு ஆண்டில் 50 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

தென்னிந்தியாவில் உள்ள, குறிப்பாக நடுத்தர வருவாய் உடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் முதுநிலைக் கல்வியை பிரிட்டனில் பயில ஆர்வம் காட்டுவதாக, தனசேகரன் மேலும் தெரிவித்தார்.

மேல்நாட்டுக் கல்விக்கு எளிதாக வங்கி கடன்கள் கிடைப்பதே மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம். பிரிட்டனில் 113 பல்கலைக்கழகங்களும், 600 கல்லூரிகளும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளை வழங்கி வருவதாக, அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்