கல்லூரிகளில் நடைபெறும் வளாகத் தேர்வுகளில் பி.ஏ., பி.காம். பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது அதிகரித்து வருவதாக, அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆய்வு ஒன்றை கீவிட் ஆலோசனை மையமும், அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பும் (ஆம்செம்) தமிழகத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. சுமார் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 50 நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதுதொடர்பான முடிவுகள் அமெரிக்க தொழில் நிறுவனங்களின் வர்த்தகசபை தமிழ்நாடு கிளை தலைவர் ராம்குமார், ஹீவிட் நிறுவனத்தின் சென்னை கிளை இயக்குனர் அஜித் ஆகியோர் சென்னையில் நேற்று வெளியிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
கடந்த 2006- 07 ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 50,000 பேரை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துள்ளன. கல்லூரிகளில் நடைபெறும் வளாகத் தேர்வு எனப்படும் 'கேம்பஸ் இன்டெர்வியூ'வில் பொறியியல் தொழிற்கல்விகள் மட்டுமின்றி, கலை- அறிவியல் கல்லூரிகளிலும் நடத்தப்பட்டன.
வளாகத் தேர்வுகள் மூலம் பி.ஏ., பி.காம் பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது கணிசமாக அதிகரித்துள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வளாகத் தேர்வுகள், மாணவர்கள் அதனை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து விளக்குவதற்காக வரும் 25- ஆம் தேதி சென்னையில் கருத்தரங்கு நடைபெறுகிறது.