முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மையங்களில் ஜூலை 20ஆம் தேதி நடைபெறுகிறது.
webdunia photo
WD
இதுகுறித்து இந்த அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மனிதநேய அறக்கட்டளை சார்பில் அளிக்கப்படும் இலவசப் பயிற்சிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தேர்வு எழுத தகுதியான 4720 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் ஆர்.கே.எம்.வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி- தி.நகர், குண்டூர் சுப்பையா பெண்கள் மேல்நிலைப் பள்ளி- தி.நகர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- மேற்கு மாம்பலத்திலும் நடக்கிறது.
மற்ற நகரங்களில், விஐடி- வேலூர், ஸ்ரீஅம்மன் கல்லூரி, சித்தோடு-ஈரோடு, வள்ளலார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மண்மங்கலம்-கரூர், பிஷப் ஹீபர் கல்லூரி-திருச்சி, சைதை துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-மேலூர் (மதுரை), வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி, சுங்கன்கடை- நாகர்கோயில் ஆகிய மையங்களில் நடைபெறுகிறது.
20-ம் தேதி காலை, மாலை இருவேளையும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுக்கான அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் 98401-06162, 99406-70110 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.