கப்பல் போக்குவரத்து துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

புதன், 9 ஜூலை 2008 (12:58 IST)
எதிர்காலத்தில் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரும், கடல்சார் ஆராய்ச்சி நிபுணருமான ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்திய உற்பத்தியாளர் நிறுவனமும் (அய்மோ) இணைந்து ஏற்பாடு செய்த `கப்பல் போக்குவரத்து துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள், வாய்ப்புகள்' என்ற கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.

விழாவில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரும், கடல்சார் ஆராய்ச்சி நிபுணருமான எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசுகை‌யி‌ல், "இந்தியாவில் 90 ‌‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் மேற்பட்ட வர்த்தகம் கப்பல் போக்குவரத்து மூலமே நடந்து வருகிறது. 1991-ம் ஆண்டு புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டுமான துறைகளில் தனியார் துறையினரும் பங்கெடுத்தனர்.

இதன் காரணமாக இந்த துறை உலக தரத்திற்கு வளர்ந்தது. இன்று இந்திய துறைமுகங்களின் வளர்ச்சியிலும், கப்பல் போக்குவரத்திலும் பன்னாட்டு நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. சென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பல புதிய துறைமுகங்களை உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் கப்பல் பணியாளர்களுக்கும், மரைன் என்ஜினீயர்களுக்கும் உலக நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இந்தியர்களின் திறமை, அறிவு, நம்பகத்தன்மை ஆகியவையே இதற்கு காரணம் ஆகும். கடல்சார் துறைகளின் வளர்ச்சியால் துறைமுகம், கப்பல் போக்குவரத்து, மரைன் என்ஜினீயரிங், மீன்வளம், சுற்றுலா உள்ளிட்டவற்றில் புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

எனவே, கடலோர மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத், ஒரிசா போன்ற மாநிலங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக துறைக்கு தேவையான பணியாளர்களையும், அதிகாரிகளையும் உருவாக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் புதிய படிப்புகளை தொடங்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டுதான் சென்னை பல்கலைக்கழகம் அண்மையில் கடல் மற்றும் கடலோர ஆய்வு மையத்தை புதிதாக தொடங்கியது. கப்பல் பணியாளர்களையும் மரைன் என்ஜினீயர்களையும் உருவாக்க இந்த மையம் பெரிதும் உதவியாக இருக்கும் எ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்