நாசா நடத்திய போட்டியில் சென்னை மாணவர்கள் வெற்றி
புதன், 9 ஜூலை 2008 (12:04 IST)
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய திறனாய்வுப் போட்டியில் சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகம் உலகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஒன்றை நடத்தியது.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணாக்கர்கள், எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் நவீன போக்குவரத்து மற்றும் சரக்கு விமானத்துக்கான வடிவமைப்பை தயாரித்து கொடுக்க வேண்டும்.
1,500 அடி முதல் 3,000 அடி வரையிலான நீளம் உள்ள ஓடுபாதையில் செயல்படத்தக்க வகையில் அந்த விமானம் இருக்க வேண்டும். 50 ஆயிரம் பவுண்ட் எடையை சுமக்கத்தக்கதாக இருக்க வேண்டும். மணிக்கு 595 மைல் முதல் 625 மைல் வரை வேகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
மேலும் அந்த விமானத்திற்கான எரிபொருள் சுற்றுப்புறத்தை பாதிக்காததாகவும், எரிபொருள் சிக்கனமாக பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும்.
இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 14 பல்கலைக் கழகத்தை சேர்ந்த 61 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அனுப்பிய வரைபடங்கள் மற்றும் விளக்க கட்டுரைகளை, நாசாவின் வல்லுனர் குழு ஆய்வு செய்தது. நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் முதல் பரிசை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கேரி ரெட்மேன் என்ற மாணவர் தட்டிச்சென்றார். இவர் நவீன பயணிகள் விமானத்துக்கான மாதிரியைக் கொடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் ஆர்.அனுஷா, எஸ்.ஸ்ரீநாத் ஆகியோர் இரண்டாம் இடத்தை பெற்றனர். எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் சரக்கு விமானத்தின் மாதிரிக்கான போட்டியில் இவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு வழிகாட்டும் மற்றும் ஆலோசனை வழங்கும் திட்ட நிபுணராக பொறியியல் மருத்துவர் இ.நடராஜன் செயல்பட்டார்.