ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் ஜூலை 9ம் தேதி (புதன்கிழமை) தொடங்க உள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களின் வசதிக்காக 6 இடங்களில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் டி. வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2008-09-ம் கல்வி ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒற்றைச்சாளர முறையின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான கலந்தாய்வு சென்னையில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை கல்லூரிச் சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், திருவல்லிக்கேணி என்.கே.டி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேப்பேரி கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டயட்), அசோக் நகர் ஸ்டெல்லா மெட்டிட்ரினா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய 6 இடங்களில் பாடப்பிரிவு வாரியாக கலந்தாய்வு நடத்தப்படும்.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குனரகத்தில் நடைபெறும்.
அறிவியல் பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை விடுமுறை) என்.கே.டி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும்.
ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, உருது, வழி மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு 10-ந் தேதியும், கலைப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும் கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்தில் நடைபெறும். கலைப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும்.
இதேபோல், தொழில் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும், தொழில் பாடப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை (ஞாயிறு விடுமுறை) அசோக் நகர் ஸ்டெல்லா மெட்டிட்ரினா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும்.
கலந்தாய்வுக்கான கட் ஆப் மார்க் தனியே வெளியிடப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.