ஜூன் 30, ஜூலை 1, 3ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் குறித்த கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2008-2009-ம் கல்வி ஆண்டில் முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்த தேதி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மாவட்டத்திற்குள் இடம்மாற விரும்பும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 3-ந் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற விரும்புவோருக்கு ஜுலை 4-ந் தேதியும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும்.
பதவி உயர்வு முதுநிலை ஆசிரியர்களுக்கு (ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடம் தவிர) ஜுலை 7-ந் தேதி சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான (2002-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு அதே ஆண்டில் நியமனம் செய்யப்பட்டவர்கள்) பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜுலை 9-ந் தேதி சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.
இதேபோல், பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு (ஆங்கிலம், கணிதம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கிரேடு-2) ஜுலை 11-ந் தேதி அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அறிவியல், வரலாறு ஆசிரியர்களுக்கு சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.
இதேநாளில் பதவி உயர்வு தமிழாசிரியர்களுக்கு எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்று பெருமாள்சாமி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.