பாட‌ங்களை மு‌ன்கூ‌ட்டியே நட‌‌த்து‌ம் ப‌ள்‌ளிகளு‌க்கு எச்சரிக்கை

வெள்ளி, 20 ஜூன் 2008 (12:47 IST)
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களை ஓராண்டுக்கு முன்பே நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதிய பள்ளிகளுக்கு அனுமதி, ஏற்கனவே அனுமதி பெற்ற பள்ளிகளுக்கு அனுமதி புதுப்பித்தல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌ம் பே‌சிய வசுந்தராதேவி, அங்கீகாரம் பெற்ற அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக 2 வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் எவை? அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் பள்ளிகள் எவை? என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க முடியும்.

மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மாதத்திற்கு 10 பள்ளிகளுக்கு திடீர் ஆய்வும், 4 பள்ளிகளுக்கு வருடாந்தர கல்வி ஆய்வும் மேற்கொள்வார்கள். பொதுத் தேர்வுகளில் மாண-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக பல மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் ஓராண்டுக்கு முன்பாகவே நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது.

திடீர் ஆய்வு மேற்கொள்ளும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் அரசு தேர்வுக்காக பாடங்கள் ஓராண்டுக்கு முன்பே நடத்தப்படுகிறதா? என்பதையும் ரகசியமாக கண்காணிப்பார்கள். அவ்வாறு முன்கூட்டியே பாடங்கள் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று வசுந்தராதேவி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்