10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழில் பயிற்சி!
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (10:38 IST)
12, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழில் பயிற்சியை சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி அருணாசலம் தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாய கல்லூரியில் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
பி.பி.ஓ., வாடிக்கையாளர்கள் தொடர்பு மற்றும் விற்பனை, விருந்தோம்பல் ஆகிய துறைகளில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் இங்கு 3வது கட்ட பயிற்சி தொடங்கப்பட உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள், ரிப்பன் மாளிகையில் கல்வித்துறையின் கீழ் உள்ள சமுதாய கல்லூரிகள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு 25384510- 201, 28591092 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.