தொழிற்பயிற்சி படித்து முடித்து வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கான சிறப்பு பயிற்சி!
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (09:56 IST)
தொழில் பயிற்சி படித்து வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கான சிறப்பு பயிற்சியை, தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்துகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பு.ரா.பிந்துமாதவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, வெளிநாடுகளில் வேலை தேடும் ஓரளவு தொழிற்பயிற்சி மற்றும் முழுமையான தொழிற் பயிற்சி பெற்றவர்களுக்கு, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) ஆகியவற்றின் மூலமாக இலவச பயிற்சி அளிப்பதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், கிண்டி, வட சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, செங்கல்பட்டு, ஓசூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அம்பத்தூர், தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 25ஆம் தேதியில் இருந்து பயிற்சி வகுப்புகள் தினசரி பிற்பகல் 5 மணி நேரம் வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்.
கற்ற தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். அயல்நாட்டு வேலைக்கு செல்வதற்கு பின்பற்ற வேண்டிய உரிய வழிமுறைகள் மற்றும் அந்தந்த நாடுகளில் தொழிற் தேவை மற்றும் சட்டங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய குறிப்பேடுகளும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். உணவு மற்றும் தங்கும் வசதியை விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சி 2-வது கட்டமாக மார்ச் மாதம் 10ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதி வரையிலும், 3-வது கட்டமாக 24ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரையிலும் நடைபெறும். மேலும் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஏ4 அளவில் உள்ள வெள்ளைத்தாளில் பூர்த்தி செய்து, `அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், முதல் தளம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600020' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
இது தொடர்பான தகவலுக்கு 24464268, 24464269 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு தகவல்!
சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா வெளியிட்டு உள்ள செய்தி வெளியீட்டில், ''சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், 27 ஆம் தேதி பாரதி மகளிர் கல்லூரியில், தொழில் நெறி வழி காட்டல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும், இதில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வு, சுயவேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அந்தந்த துறை நிபுணர்களால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது'' என்று கூறியுள்ளார்.
கணினி பயிற்சி!
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில், "கணிப்பொறி அறிதல் எனும் குறுகிய கால பயிற்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இதில், விண்டோஸ் இயக்க முறையும், எம்.எஸ்.ஆபீஸ் பயிற்சியும் அளிக்கப்படும்.
இது 30 மணி நேர பயிற்சியாகும். இந்த பயிற்சி மார்ச் மாதம் 1ஆம் தேதி பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மைய வளாகத்தில் தொடங்குகிறது. மேலும் தகவலுக்கு 24410025, 24915250 என்ற தொலைபேசி எண்களுக்கு டயல் செய்து பெற்றுக்கொள்ளலாம்'' என்று கூறியுள்ளார்.