சவூதி அரேபியாவில் தமிழக நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:19 IST)
சவூதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணி புரிய எம்.எஸ்சி., பி.எஸ்சி. படித்த நர்சுகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான பு.ரா.பிந்து மாதவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய எம்.எஸ்சி., பி.எஸ்சி. தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள 22 முதல் 45 வயதிற்குட்பட்ட நர்சுகள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
மனுதாரர்கள் 2 ஆண்டுகள் தொடர்ந்து அவசர சிகிச்சை கண்காணிப்பு பிரிவுகளில் (தீவிர கண்காணிப்பு பிரிவு, ஐ.சி.சி.யு., பி.ஐ.சி.யு., ஈ.ஆர்., தீக்காயப் பிரிவு, என்.ஐ.சி.யு., ஹீமோ டயாலசிஸ் பிரிவு) பதிவு பெற்ற நர்சாக பணி புரிந்திருக்க வேண்டும்.
மேற்காணும் பணிக்கு தகுதியும், திறமையும், அனுபவமும் உள்ளவர்கள், தங்களின் விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், கடவுச் சீட்டு ஆகியவற்றின் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து சென்னை அடையாறு, எண் 48, முத்து லெட்சுமி சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.