நாடு முழுவதிலும் அதிக மதிப்பெண்கள் பெறும் 25 லட்சம் பள்ளி சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.1,868.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. டெல்லியில் இன்று நடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மீதான மத்திய அமைச்சரவை கூட்டதை அடுத்து, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "அவற்றில் 30 விழுக்காடு உதவித்தொகை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சார்ந்த மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்தியாவில் அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒருவருக்கு அதிகபட்ச கல்விக்கட்டணமாக மாதம் ரூ.350 உதவித்தொகை வழங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல் விடுதிச்செலவு ரூ.600-ல் இருந்தும், விடுதியில் தங்காத மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்து ரூ.100-ம் வழங்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து சேர்க்கை கட்டணமாக ஆண்டுக்கு ரூ.500 வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான செலவில் ரூ.1,408.40 கோடி மத்திய அரசும், ரூ.460.10 கோடி மாநில அரசும் பகிர்ந்துகொள்கிறது. யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.