மசாலா தொழில் நுட்பத்தை மேம்படுத்த புதிதாக ஐ.ஐ.டி.!
புதன், 30 ஜனவரி 2008 (18:17 IST)
மசாலா தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் வகையில், தனியாக ஒரு ஐ.ஐ.டி. உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
கோவா தலைநகர் பானஜியில் நடைப்பெற்று வரும் ஒன்பதாவது பன்னாட்டு மசாலா காங்கிரஸ் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காங்கிரசுக்கு இந்திய மசாலா வாரியம், அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய உணவு வகைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் மசாலா தொழில்நுட்பத்தை மேம்படுத்தி புதிய வகைகளை உருவாக்கவும், இந்த மசாலாவில் பயன்படுத்தப்படும் ஏலம், கறுவாப்பட்டை, சாதிக்காய், மிளகு உள்ளிட்ட பொருட்களை மருந்து உற்பத்தி, அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட குறைகளில் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள மத்திய அரசு ஐ.ஐ.டி. ஒன்றைஉருவாக்க திட்டமிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பன்னாட்டுச் சந்தையில் வடகிழக்கு மாநிலங்களின் ஆர்கானிக் வகைகளை விற்பதன் முதற்கட்டமாக முதலில் நாட்டின் பிற பகுதிகளில் விற்பனை செய்ய ஒரு புதிய திட்டத்தை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். இந்திய மசாலா வகைகளுக்கு இந்தியாவிலும், ஆஸ்ட்ரேலியாவிலும் நல்ல சந்தை வாய்ப்புள்ளது. நடப்பு 2007 - 08 நிதியாண்டில் மசாலா பொருட்கள் ரூ.3,482 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.