கல்வி விசா : பிரிட்டிஷ் கவுன்சிலில் கருத்தரங்கு!

வியாழன், 3 ஜனவரி 2008 (18:18 IST)
இங்கிலாந்தில் கல்வி பயில திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்களுக்கு அதற்கான விசா வழங்குவது குறித்த விவரங்களை விளக்கிட வரும் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதரகம் மேலும் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது!

ஜனவரி 10 ஆம் வியாழக்கிழமை 4 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் சென்னை பிரிட்டிஷ் துணைத் தூதரகத்தின் அனுமதி வழங்கல் அலுவலர் ரயான் பென்னட் தற்பொழுது கடைபிடிக்கப்பட்டு வரும் கல்வி தொழில்நுட்ப ஒப்புதல் திட்டம் (ATAS) உள்ளிட்ட விசா தொடர்பான நடைமுறைகளை மாணவர்களுக்கு விளக்கிடவுள்ளார்.

விசா பெறுவது தொடர்பான சந்தேகங்கள் அனைத்திற்கும் ரயான் பென்னட் விளக்கமளிப்பார் என்று பிரிட்டிஷ் துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தற்பொழுது இங்கிலாந்தில் 27,000 இந்திய மாணவர்கள் உயர் கல்வி கற்று வருகின்றனர். கடந்த செப்டம்பரில் தென் இந்தியாவில் இருந்து மட்டும் இங்கிலாந்தில் மேற்படிப்பிற்கு சென்ற 6,846 மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பயிலும் இந்திய மாணவர்களில் 36 விழுக்காட்டினர் தென் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்