சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் கல்வி நிறுவனத்திற்கு உதவி : மத்திய அரசு!
வியாழன், 13 டிசம்பர் 2007 (18:52 IST)
கோவையில் உள்ள புகழ்பெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ்டைல் கல்வி நிறுவனம் மூடப்படும் என்று வெளியான தகவல்களை மறுத்துள்ள மத்திய அரசு, டெக்ஸ்டைல் நிர்வாகத்துறையில் மேம்பட்ட கல்வி மையமாக இந்நிறுவனத்தை மாற்றும் வகையில் ரூ.29 கோடி ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது.
வருகிற 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் இந்த நிதியில் ரூ.18 கோடியைக் கொண்டு, கூடுதல் நிலம் வாங்குதல், நிர்வாகக் கட்டடம், மாணவர் விடுதிகள், உணவு விடுதிகள், கணினி மையம் கட்டுதல், கணினிகள், மென்பொருட்கள், கற்பித்தல் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதுடெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரய ரஞ்சன் தாஸ்முன்ஷி இத்தகவலைத் தெரிவித்தார்.