தொழில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:55 IST)
சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல்வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக பெயர் பதிவு செய்ய விரும்புவோருக்காக புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை சாந்தோமில் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் புதியதாகப் பதிவு செய்ய விரும்பும் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் தொழில்-செயல் கல்வித் தகுதி பெற்றவர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளம் மூலமாக படிவத்தின் நகலினை எடுத்து உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவஞ்சலில் (ரிஜிஸ்டர் தபால்) `தொழில் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை-4' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
கூடுதல் கல்வித் தகுதிகளைப் பதிவு செய்ய விரும்பும் மனுதாரர்கள் அடையாள அட்டையின் நகலுடன் கூடுதல் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்களின் புகைப்பட நகலை இணைத்து பதிவஞ்சல் மூலம் தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துப் பதியலாம்.
புதுப்பித்தல் செய்ய வேண்டிய மனுதாரர்கள் தங்களது புதுப்பித்தலை வலையதளத்தைப் பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மனுதாரர்கள் சென்னைக்கு வருவதைத் தவிர்க்கலாம். சென்னை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது