தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக 48 லட்சத்து 4 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர்.
ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்காக மாணவ, மாணவிகள் விரைந்து வருகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
அங்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளால் பல மாணவ, மாணவிகள் பதிவு செய்ய முடியாமல் சென்று விடுகின்றனர். சிலர் காலை முதல் மாலை வரை காத்திருந்து பதிவு செய்கிறார்கள்.
இது தவிர பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவினரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குவிகின்றனர். அவர்கள் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்கின்றனர்.
கடந்த அ.தி.மு.க. அரசின் வேலை நியமனத் தடைச் சட்டத்திற்கு தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் வரை அரசு துறைகளில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருந்து வந்தது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வம் காட்டவில்லை.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வேலை நியமனத் தடைச் சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலங்களின் மீது இளைஞர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சான்றிதழ்களைப் பதிவு செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அரசின் சலுகையால் புதுப்பிக்கப்படாமல் இருந்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு புதுப்பித்தனர்.
தற்போதைய கணக்குப்படி, தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உயிர் பதிவேட்டில் (லைவ் ரெஜிஸ்டர்) காத்திருப்போர் பட்டியலில் உள்ள மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 25.94 லட்சம்; பெண்கள் 22.10 லட்சம்.
பதிவு செய்தோரில் சாதி வாரியான விவரம் வருமாறு:
பிற்படுத்தப்பட்டோர்- 20.22 லட்சம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 10.54 லட்சம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் 11.98 லட்சம் இதர வகுப்பினர் 5.30 லட்சம்
கடந்த 5 ஆண்டுக்கு மேல் காத்திருப்போரில் கல்வித் தகுதி வாரியாக பதிவு செய்தோர் எண்ணிக்கை விவரம் வருமாறு:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் 5.71 லட்சம் பிளஸ் 2 தேர்ச்சி- 4 லட்சம் பட்டதாரிகள்- 2.10 லட்சம், இதில் ஊனமுற்றோர் 81,116 பேர்.
இதுவரை 14,200 பேருக்கு மட்டுமே வேலை நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் முதல் (புதிய அரசு பொறுப்பேற்ற பின்) 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வேலைவாய்ப்புத்துறை வாயிலாக பரிந்துரை செய்யப்பட்டு பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 200 மட்டுமே.
இதே கால கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட வேலை காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 386.
தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண்ணிக்கையில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாவட்ட வாரியாக பதிவு செய்தோர் எண்ணிக்கை விவரம் சென்னை சாந்தோம், அடையாறில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 5.48 லட்சம் ஆகும்.