அமெரிக்க நிறுவனங்கள் அலுவல் வெளி ஒப்படைப்பு பணியால் (பி.பி.ஓ.) 990 கோடி டாலர் சேமிக்க முடியும் என ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் அன்றாட நிர்வாக அலுவல்கள், ஊழியர்களுக்கு சம்பளப் பட்டியல் தயாரிப்பது, வாடிக்கையாளர்களின் குறைகளை பதிவு செய்வது, மருத்துவமனைகளின் குறிப்புகளை ஆவணப்படுத்துவது, மருத்துவர்களின் பரிந்துரைகளை ஆவணப்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை இந்தியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொடுக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா போன்ற நாடுகளில் வேலை செய்பவர்களி்ன் சம்பளம் மிகக்குறைவு. இதனால் நிர்வாகச் செலவை குறைப்பதற்காக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளிடம் பணியை ஒப்படைக்கின்றன.
இதன் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் 990 கோடி டாலர் சேமிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. போஸ்டர் என்ற ஆய்வு நிறுவனம், வெளி ஒப்படைப்பு பணி ஆலோசனை நிறுவனமான டி.பி.ஐ நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டது.
இதில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் பணியை ஒப்படைப்பதால் 12 முதல் 17 சதவிதம் வரை செலவு குறைகின்றது. குறைந்த அளவு மற்றும் அதிகளவு பணியை ஒப்படைக்கும் நிறுபனங்கள் 12 சதவிகிதம் வரை நிர்வாகச் செலவை சேமிக்கின்றன. நடுத்தர அளவு, முழு அளவு பணியை ஒப்படைக்கும் நிறுவனங்கள் 17 சதவிதம் வரை நிர்வாகச் செலவை சேமிக்கின்றன என்று போஸ்டர் ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் டாக்டர் பால் ரோகிர்க் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிறுவனமும் அதன் முக்கியமான பணிகளான உற்பத்தியை அதிகரிப்பது, வர்த்தகத்தை அதிகரிப்பது, விரிவுபடுத்துவது போன்ற வேலைகளைத் தவிர, அன்றாட நிர்வாக வேலைகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதனால் அவைகளின் செலவு குறைவதுடன், அத்தியாவசிய வேலைகளிலும் கவனம் செலுத்த முடிகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள், அவைகளின் நிர்வாக பணிகளை வெளிநாடுகளில் ஒப்படைப்பதால், செலவினத்தில் குறைந்த பட்சம் 15 விழுக்காடாவது சேமிக்கின்றன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் 990 கோடி டாலர் சேமிக்க முடியும்.
உலக அளவில் நிர்வாக வெளி ஒப்படைப்பு பணியின் மதிப்பு வருடத்திற்கு 7700 கோடி டாலருக்கு அதிகமாக இருக்கின்றது. இதில் தற்சமயம் 30 சதவித பணிகள் மட்டுமே, வெளிநாடுகளில் ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது அமெரிக்க நிறுவனங்கள் 11,000 கோடி டாலர் மதிப்பிற்கு நிர்வாக பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.