நாங்குநேரியில் புதிய தொழில் மையங்கள்!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (20:20 IST)
தமிழக அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக ஏழு வகையான தொழிற்பேட்டைகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது!

இது நாங்குநேரியில் அமைக்கப்படயிருந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு பதிலாக அமைக்கப்படுகிறது.

இதன்படி 121 ஹெக்டேர் பரப்பளவில் பொறியியல் தொழிற்சாலைகளும், 110 ஹெக்டேர் பரப்பளவில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், 107 ஹெக்டேர் பரப்பளவில் மின் சாதனங்கள் மற்றும் கணினி வன்பொருட்கள் ( ஹார்ட்வேர் ) தயாரிக்கும் தொழிற்சாலைகளும், 185 ஹெக்டேர் பரப்பளவில் மருந்து பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளும், 70 ஹெக்டேர் பரப்பளவில் சரக்கு போக்குவரத்துக்கான மையமும், 10 ஹெக்டேர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களும், 13 ஹெக்டேர் பரப்பளவில் உயிரித் தொழில் நுட்ப தொழிலகங்களும் தொடங்குவதற்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன.

உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தொழிற்பேட்டைகளை அமைக்க முன்பு முடிவு செய்யப்பட்டது.

இதனால் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகுவதுடன், மக்களின் வருவாயும் அதிகரிக்கும். இதனடிப்படையில் முன்பு இருந்த தி.மு.க ஆட்சி காலத்தில் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அ.தி.மு.க ஆட்சியில் இந்த திட்டம் நடைமுறைபடுத்த முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

மீண்டும் 2006 இல் தி.மு.க அரசு அமைந்தவுடன் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த பணிகள் முடிய கால தாமதம் ஆவதால், இப்போது தனித்தனியாக தொழில் வாரியாக தொழிற்பேட்டைகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்