சென்னையில் இயங்கிவரும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக் கழகத்திற்கு (அகாடமி ஆஃப் மேரிடைம் எஜூகேஷன் அண்ட் டிரையினிங்) நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கியுள்ளது மத்திய அரசு!
மத்திய பல்கலைக்கழக நிதி ஆணைய சட்டப் பிரிவு 3ன் கீழ் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இந்த நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை கல்வி மற்றும் பயிற்சிக் கழகத்திற்கு அளித்துள்ளது.
கடல்சார் கல்விக் கழகம் ஒன்றிற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று அக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இயக்குநருமான கேப்டன் பரத்வாஜ், தலைவர் ஜே. ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினர்.
விரைவில் இக்கல்விக்கழகத்தை பல்கலைக்கழகமாக மத்திய கடல் மற்றும் சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தேசத்திற்கு அர்ப்பணம் செய்வார் என்று அவர்கள் கூறினர்.
சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக் கழகத்தி்ல் சான்றிதழ், இளம் மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்களில் கடல் தூர விஞ்ஞானம், கடல்சார் பொறியியல், கடல்சார் தொழில்நுட்பம், கடற்படை கட்டுமானக் கலை ஆகியனவும், கடல் போக்குவரத்து மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றில் ஆளுமை கல்வித் திட்டமும் கற்றுத்தரப்படுகிறது.