ஐ.ஏ.எஸ். தேர்வில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 60% வெற்றி

Webdunia

திங்கள், 3 செப்டம்பர் 2007 (13:54 IST)
ஐ.ஏ.எஸ். தேர்வில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 60 சதவீதம் பேர் வெற்றிபெறுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் கூறியுள்ளார்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் ஃபியூச்சரா07 விழாவின் துவக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பண்ணாரி அம்மன் கல்லூரியின் தாளாளரும், பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டு பேசினார்.

கல்லூரி பருவத்தில் மாணவ, மாணவிகள் ஆராய்ச்சியில் அதிகமாக ஈடுபடவேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தியதை நினைவூட்டினார். ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் 60 சதவீதம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர், அடுத்து 10 சதவீதம் மருத்துவ கல்வி மாணவ, மாணவிகள் வெற்றி பெருவதாக மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் கூறினார்.

முன்னதாக ஃபியூச்சரா07-ஐ பற்றி கல்லூரியின் முதல்வர் டாக்டர் சண்முகம் விளக்கினார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியை கோராக்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர் கராபார்த்தி துவக்கி வைத்து பேசினார்.

விழாவில் சென்னையில் கடந்த 20, 21 ம் தேதிகளில் மாநில அளவில் நடந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் பண்ணாரி அம்மன் கல்லுரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு பயோ டெக்னாலஜி மாணவி ஸ்வீதா முதல் பரிசையும், இதே பிரிவை சேர்ந்த மாணவி அமிர்தா இரண்டாம் பரிசையும், நான்காம் ஆண்டு மெக்கனானிக்கல் மாணவர் அருள்செந்தில்நாதன் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கல்லுõரி சார்பில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் நன்றி கூறினார்.

ஃபியூச்சரா07 அறிவியல் கண்காட்சியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டா, குஜராத், டில்லி மற்றும் ஒரிஸா மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 400 க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் மற்றும் 140 கருத்தாய்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது.